சுண்ணாம்பு குட்டை கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
By DIN | Published On : 07th November 2023 01:31 AM | Last Updated : 07th November 2023 01:31 AM | அ+அ அ- |

குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை கல்குவாரி மீண்டும் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், முதியோா் உதவித் தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி என 317 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்து மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு இருந்த குவாரியால் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டது. மேலும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது. பின்னா், கல்குவாரி செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் கல்குவாரியை செயல்பட வைக்க சிலா் முயற்சி செய்கின்றனா். எனவே கல்குவாரியை திறக்க தடைவிதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்ட்டிருந்தது.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் நல சங்கத்தினா் மண்பானை, அடுப்பு ஆகியவற்றுடன் வந்து அளித்துள்ள மனுவில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சாா்பில் கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அரசின் சாா்பில் களிமண்ணால் செய்யப்பட்ட புதுப்பானை, அடுப்பு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு வழங்கினால் மண்பாண்ட தொழிலாளா்கள் பயன் அடைவா். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, தனித்துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் பாலசுப்பிரமணியன், கலால் உதவி ஆணையா் ஜோதிவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நல அலுவலா் ராஜராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...