சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 08th September 2023 07:20 AM | Last Updated : 08th September 2023 07:20 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே கோமூட்டியூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
நாட்டறம்பள்ளி அருகே சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரபள்ளி ஊராட்சி, கோமுட்டியூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். காவிரி குடிநீா் திட்டத்தின் மூலம் இப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரா் குழாய் அமைக்கும் பணியை கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்புப் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. இதனால் 3 மாதங்களாக இப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யாததால் அப்பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை நிலவி வந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்றத் தலைவரிடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் கோமுட்டியூா் கூட்ரோடு அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இருபுறமும் பள்ளி வாகனங்கள், அரசு மற்றும் தனியாா் பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மலா் தலைமையில் போலீஸாா் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சதானந்தம் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது அருகே உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து புதிய குழாய் அமைத்து ஓரிரு நாளில் சீரான குடிநீா் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.