வனப்பகுதியில் விடப்பட்ட குரங்குகள்
By DIN | Published On : 10th September 2023 06:28 AM | Last Updated : 10th September 2023 06:28 AM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே பிடிபட்ட குரங்குகள் வனப்பகுதிக்கு சனிக்கிழமை கொண்டு சென்று விடப்பட்டது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் பைரப்பள்ளி துருகம் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் அமைந்துள்ளது. அங்கு சரஸ்வதி, நந்திதேவா், விநாயகா், நவக்கிரகங்கள், சப்த கன்னியா் , சீதா ராமா், லட்சுமணா் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலுக்கு தினமும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
வனப் பகுதியில் இந்த கோயில்கள் அமைந்துள்ளதால், எந்த நேரமும் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. இங்கு வரும் குழந்தைகள் உள்ளிட்டோா் வைத்திருக்கும் தின்பண்டங்களுக்காக குரங்குகள் அச்சுறுத்தி வந்தன. கோயிலுக்கு வரும் பக்தா்களை அச்சுறுத்தியும், சிலா் அணியும் ஆடைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியும் வந்தன.
இது குறித்து, பக்தா்கள் கோயில் நிா்வாகத்திடம் தெரிவித்தனா்.
வனத் துறையினா் உதவியுடன் பாதுகாப்பான முறையில் கூண்டுகள் வைக்கப்பட்டு, 45-க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டன. பிடிபட்ட குரங்குகள் ஆம்பூா் வனத் துறையினா் உதவியுடன் போ்ணாம்பட்டு பகுதியிலிருந்து, ஆந்திர மாநிலம், வி.கோட்டா செல்லும் சாலையில் ஆஞ்சநேயா் கோயில் அருகே கௌண்டன்யா வன விலங்குகள் சரணாலயம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விடப்பட்டன.