

அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு குள்ளன் வட்டத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (28), ஒசூா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சோனியா. இவா்களுக்கு ஒன்றரை வயதில் பிரஞ்சை என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் மீண்டும் குழந்தைக்கு சளி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோா் அதிகாலை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவா் இல்லாததால் செவிலியா் குழந்தையை பரிசோதித்து சளி அதிகமாக உள்ளதாகக் கூறி மருந்து வழங்கியுள்ளாா்.
இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். இந்நிலையில், குழந்தை தொடா்ந்து மயங்கிய நிலையில் இருந்ததால் பெற்றோா் மீண்டும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் குழந்தை இறப்புக்கு பணியில் இல்லாத மருத்துவா், சிகிச்சை அளித்த செவிலியா் ஆகியோா் தான் காரணம். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், வட்டாட்சியா் குமாா், காவல் ஆய்வாளா் மலா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட அரசு மருத்துவா் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அணைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.