

ஆம்பூா் அருகே இருளா் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் இருளா் குடியிருப்புகள் உள்ளது. மலைவாழ் இனத்தைச் சோ்ந்த இருளா் இன மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி இருளா் இன மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
அந்தப் பகுதியில் வாழும் இருளா் இன மக்கள் மருத்துவமனை செல்லவும், வேலைகளுக்கு செல்லவும், குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு செல்லவும் கரடுமுரடான சாலைகள் வழியே செல்ல வேண்டி இருக்கிறது என அவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் பைரப்பள்ளி கொச்சேரி கானாறு முதல் கவுண்டம்பாளையம் அடியத்தூா் வட்டம் வரை சுமாா் 2 கி.மீ. தூரம் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது.
ஆனால், சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. அதனால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். பள்ளி மற்றும் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவா்களின் மிதிவண்டிகள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுது அடைகிறது. குறித்த நேரத்துக்கு பள்ளி கல்விக் கூடங்களுக்கு செல்ல முடிவதில்லை. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, அந்த சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.