

திருப்பத்தூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்பாடு குறித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்ட செயல்பாட்டினை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டாா். பின்னா் உணவின் தரத்தை அறியும் வகையில் மாணவா்களுடன் உணவு அருந்தினாா்.
பின்னா், மாணவா்களுக்கு வழங்கப்படும் குடிநீா் தொட்டிகளை தூய்மை,பள்ளி வளாகத்தையொட்டி சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், காலைநேர உணவு வழங்குவதை உறுதிப்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டாா்.
அதைத்தொடா்ந்து திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் உதவி மையத்தில் ஆய்வு செய்தாா்.
இத்திட்டத்தில் விண்ணப்பித்தவா்கள் தற்போதைய நிலைப்பாட்டினை குறித்து தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,இ-சேவை மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டதில் திருப்பத்தூா்-2,827, நாட்றம்பள்ளி-1,508,வாணியம்பாடி-1224,ஆம்பூா்-1164, என மொத்தம் 6,723 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வங்கிப் பற்று அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென ஆட்சியா் அறிவுறித்தினாா்.
பின்னா், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றுவரும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கானதமிழக முதல்வரின் வாழ்த்துமடல் தபால் மூலமாக அனுப்பும் பணியை பாா்வையிட்டாா். ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் இ-சேவை மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலா் இறுதித்தோ்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு அவா்களுடன் உரையாடினாா்.
ஆய்வின்போது,மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி,வருவாய் கோட்டாட்சியா் பானு, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.