மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 402 மனுக்கள்

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், பொதுமக்களிடம் இருந்து 402 மனுக்களை பெற்றாா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், பொதுமக்களிடம் இருந்து 402 மனுக்களை பெற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ.2,82,000 மதிப்பில் ஸ்கூட்டா்கள், 25 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பில் அதிநவீன படிக்கும் கருவிகள் உள்பட 33 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் (குலாலா்) நல வாரியத்தினா், அரசால் தடை செய்யப்பட்ட பி.ஓ.பி. பவுடா் மூலம் விநாயகா் சிலைகள் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜாபெருமாள் மற்றும் சங்கத்தினா், வாணியம்பாடி அருகே அம்பலூா் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் மனு அளித்தனா்.

கந்திலி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கந்திலி வெளிபேட்டை பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என்றும், நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் அழகா்பேட்டை பகுதியில் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும் என்றும், திருப்பத்தூா் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி, புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியா் என்னை டிபிரமோட் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்களை அளித்தனா்.

இதேபோல், திருப்பத்தூா் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்பவா்கள், திருப்பத்தூா் நகராட்சியில் தனியாா் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், எங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. முறையாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com