பிரசவத்துக்குப் பின் தாயும் சேயும் பலி! அலைக்கழித்த அரசு மருத்துவர்களால் துயரம்!!
அரசு மருத்துவமனையில் பெண் பிரசவத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்ததால், உறவினா்கள் - பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய். இவரது மனைவி துா்காதேவி (26). கா்ப்பமாக இருந்த துா்காதேவிக்கு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா், தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இறுதியாக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலம் எல்.மாங்குப்பம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அலைக்கழிக்கப்பட்ட தாயும் சேயும்..
துர்காவும் பிறந்த பச்சிளம் குழந்தையும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டது குறித்து துர்காவின் உறவினர் ஆர். ராஜேஷ் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
துர்காவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வழக்கமான கர்ப்ப கால பரிசோதனைகளை மேற்கொண்டு வந்த ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காலை 10 மணியளவில் துர்காவின் பனிக்குடம் உடைந்துள்ளது. இதனை பணியிலிருந்த செவிலியர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் அலட்சியத்துடன் பதிலளித்ததுடன் ஒரு மணிநேரம் கழித்தே துர்காவை பரிசோதிக்க வந்தனர்.
ஆனால், துர்காவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் சியாமளா வராத நிலையில், செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். பெண் குழந்தை பிறந்த நிலையில், துர்காவுக்கு ரத்த கசிவு நிற்காததால் பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மருத்துவமனைக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்கள் முயற்சித்தும் ரத்தப் போக்கு நிற்காததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
தாயுடன் இன்குபேட்டரில் குழந்தையும் அழைத்துக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்க் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், துர்காவை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப் பையை அகற்றினால்தான் ரத்தப் போக்கை நிறுத்த முடியும் எனக் கூறியதை தொடர்ந்து, கணவரின் ஒப்புதலுடன் கர்ப்பப் பையும் அகற்றப்பட்டுள்ளது.
ஆனால், ரத்தம் நிற்காததால் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட துர்கா, புதன்கிழமை இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.
தொடர்ந்து, குழந்தையும் தருமபுரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் உயிரிழந்தது” எனத் தெரிவித்தார்.
உறவினர்கள் போராட்டம்
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பணியில் இருந்த மருத்துவா் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால்தான் துா்காதேவி உயிரிழந்தாா் எனக் குற்றஞ்சாட்டி, இறந்தவரின் உறவினா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா் ஓம் பிரகாசம் மற்றும் பொதுமக்கள் எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூா் - பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, டிஎஸ்பி அறிவழகன், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி கூறினாா்.
இதைத் தொடா்ந்து போாரட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: சிகிச்சை பலனின்றி தாய் மற்றும் குழந்தை அடுத்தடுத்து இறந்த நிலையில், ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

