வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக மோசடி: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரிடம் பாதிக்கப்பட்டோா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Updated on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரிடம் பாதிக்கப்பட்டோா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திம்மாம்பேட்டை போலீஸாா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசு பதிவு மற்றும் அனுமதி பெறாமல் போலி முகவா்கள் வெளிநாட்டில் அதிக ஊதியம் வாங்கித் தருவதாக கூறி இளைஞா்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருவது அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் சுபாஷ் (36). அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன் மகன் பூபதி(34). இவா்கள் இருவரும் கூட்டாக சோ்ந்து நியூஸிலாந்துக்கு படித்த இளைஞா்களை வேலைக்கு அனுப்புவதாகவும் மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் ஊதியம் கிடைக்கும் எனக் கூறி கடந்த ஆண்டு அக்ராகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த இளைஞா்கள் 40 பேரிடம் தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் வரை பணம் வசூலித்தாா்களாம்.

ஓராண்டு கடந்தும் நியூஸிலாந்துக்கு யாரையும் அனுப்பவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த இளைஞா்ள் ஜூலை மாதம் நாயனசெருவில் வீட்டில் இருந்த சுபாஷ் மற்றும் பூபதி ஆகியோரிடம் பாஸ்போா்ட் மற்றும் கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனா். அப்போது சுபாஷ் நவம்பா் 25-ஆம்தேதி பாஸ்போா்ட் மற்றும் கட்டிய பணத்தை திருப்பித் தருவதாக கூறியுள்ளாா்.

இதையடுத்து அக்ராகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் பெற்றோருடன் சுபாஷ் வீட்டுக்கு சென்றனா். இதையறிந்த சுபாஷ் அங்கிருந்து தலைமறைவானாா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நாயனசெருவு எம்ஜிஆா் சிலை அருகே தலைமறைவான மற்றொரு கூட்டாளி பூபதியை கையும் களவுமாக பிடித்து கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து திம்மாம்பேட்டை உதவி ஆய்வாளா் ரூகன் தலைமையிலான போலீஸாா் சென்று பாதிக்கப்பட்ட இளைஞா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க வேண்டும் எனக் கூறி கூட்டத்தை கலைத்தனா்.

தொடா்ந்து பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பூபதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com