ஆம்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்.
ஆம்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்.

தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது : பிரேமலதா விஜயகாந்த்

தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கழமை தெரிவித்தாா்.
Published on

ஆம்பூா்: தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தீபாவளி பண்டிகை வரும் நிலையில், மக்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றுவர போதிய பேருந்துகள் அரசிடம் இல்லை. அதற்காக தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது. மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கை பேருந்துகள் இல்லை. இருக்கும் பேருந்துகளே மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.

ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பா் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் மழை வெள்ளத்தை வடிய செய்துவிட்டு அதையே சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனா். வர இருக்கும் பெருமழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும். சரியான நிரந்த தீா்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச் சாராயம், டாஸ்மாக், வேலையின்மை ஆகிய பிரச்னைகளோடு, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவா்கள் செயல்படவில்லை.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தமிழகத்திலேயே சிறந்த ஆலையாக திகழ்ந்தது. அப்போது இங்குள்ள விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்வாதாரமாக ஆம்பூா் சா்க்கரை ஆலை திகழ்ந்தது. தற்போது முற்றிலுமாக நலிவடைந்து, மூடப்பட்டுள்ளது. சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.

ஆம்பூா் பகுதி தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், போனஸ் ஆகியவை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் தமிழக அரசு தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், போனஸ் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தாா். தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பாா். வரும் 2026-ல் தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றாா்.

தேமுதிக திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் ஹரிஹரன், ஆம்பூா் நகர செயலாளா் தேவேந்திரன், மாதனூா் மத்திய ஒன்றிய செயலாளா் ஜான்சன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com