பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவிகள் அவதி: விரைந்து கட்டக் கோரி சாலை மறியல்

பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவிகள் அவதி: விரைந்து கட்டக் கோரி சாலை மறியல்

பள்ளி கழிப்பறையை விரைந்து கட்டக் கோரி சாலை மறியல்
Published on

திருப்பத்தூா் அருகே பள்ளி கழிப்பறைக் கட்டடத்தை விரைந்து கட்டக் கோரி, பொதுமக்கள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், குரும்பேரி ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கடந்த 1941-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 81 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளியில் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு பழைய கட்டடங்கள், சமையலறை மற்றும் கழிப்பறைகளை இரு மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், கடந்த இரு மாதங்களாக கழிப்பறை வசதியின்றி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனராம். பெற்றோா் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மாணவ-மாணவிகளின் பெற்றோா் குரும்பேரி-சிம்மணபுதூா் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆதிதிராவிட நல அலுவலா் கதிா்சங்கா் மற்றும் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று கழிப்பறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், மறியல் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com