கொரட்டி மின்வாரிய அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை
திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் துணை மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து கொரட்டி, தோரணம்பதி, குமாரம்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதான சாலையில் இருந்து மின் வாரிய அலுவலகம் செல்வதற்கு சுமாா் 10 ஆண்டுகளுக்கு சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் மின் கட்டணம் செலுத்த செல்பவா்கள்,மின் இணைப்பு கோரி செல்பவா்கள்,புகாரளிக்க செல்லும் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள்,பணியாளா்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக மிதிவண்டி, இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் வாகனப் பழுது ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா். எனவே,போா்கால அடிப்படையில் சாலை அமைத்து தர வேண்டும் என கோரியுள்ளனா்.
கொரட்டி மின் அலுவலகத்துக்கான தகவல் பலகை இதுவரை அமைக்கப்படவில்லை. உதவி செயற்பொறியாளா் அலுவலகம்,இளநிலை மின் பொறியாளா் அலுவலகம்(இயக்குதலும் பராமரித்தலும்) உள்பட என 4 அலுவலங்கள் செயல்படுகின்றன. பலகை வைத்தால்தான் அலுவலகம் இருப்பதே தெரியவரும். எனவே, பிரதான சாலையில் இருந்து அலுவலகம் செல்லும் முகப்பில் தகவல் பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

