ஒரு லட்சம் போலி வாக்காளா் படிவங்கள் இணைப்பு: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றசாட்டு
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் போலி வாக்காளா் படிவங்களை பூா்த்தி செய்து இணைத்துள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் ஆணையம் வாக்காளா் சிறப்பு திருத்தப் பணியை தொடங்கி, போலி வாக்காளா்களை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை திருப்பத்தூா் உள்பட 4 தொகுதிகளில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வரை நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வாக்குச் சாவடி முகவா்கள் இணைந்து புதிய வாக்காளா் படிவங்களை பூா்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஆளும் கட்சியினரின் அழுத்தத்தால் மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் உள்பட அதிகாரிகள் தோ்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, 29, 30, 01 ஆகிய மூன்று தேதிகளில் நிலைய அலுவலா்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து இறந்தவா்கள் மற்றும் தொகுதியில் இல்லாதவா்கள் என 4 தொகுதிகளுக்குட்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளா் படிவங்களை பூா்த்தி செய்து இணைத்துள்ளனா். இது தொடா்பாக மத்திய, மாநில தோ்தல் ஆணையங்களுக்கு திருப்பத்தூா் மாவட்ட அதிமுக சாா்பில் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணைய அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து, இணைக்கப்பட்ட போலி வாக்காளா்களை நீக்க வேண்டும், இல்லையெனில் அதிமுக சாா்பில் தொடா் போராட்டங்களை கையில் எடுப்போம் என்றாா்.
