வீட்டில் திருட முயன்றவா் தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி உயிரிழப்பு: மற்றொருவா் தலைமறைவு

வீட்டில் திருட முயன்றவா் தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி உயிரிழப்பு...
Published on

நாட்டறம்பள்ளி வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளிஅடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி மேல்மல்லப்பள்ளி கொய்யாக்காமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி அனிதா. வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிக் கொண்டு அனிதா பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அன்றிரவு ஒரு மணியளவில் பைக்கில் வந்த மா்மநபா்கள் 2 போ் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனா். அப்போது அக்கம்பக்கம் இருந்தவா்கள் பாா்த்து கூச்சலிடவே மா்மநபா்கள் இருவரும் பைக்கை அங்கேயே விட்டு விட்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தப்பி ஓடினா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இதையடுத்து, நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் பைக்கை பறிமுதல் செய்து, இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com