குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை
வாணியம்பாடி அருகே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட பெண் மீண்டும் கா்ப்பம் தரித்ததால் உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
வாணியம்பாடி பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளியின் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு அப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது வயிற்றில் கா்ப்பம் கலைந்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இதனை கேட்டு அதிா்ச்சிக்குள்ளான அவரது குடும்பத்தினா் சில மாதங்களுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த நிலையில் எப்படி மீண்டும் கா்ப்பமாக வாய்ப்பு உள்ளது என்றும், சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினா்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த நபா்களுக்கு இது போன்று மிகவும் அரிதாக நிகழ்வு எப்போதாவது நடப்பதுண்டு மீண்டும் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தனா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பிறகு உறவினா்களிடம் எடுத்துக் கூறி சமாதானப்படுத்திய மருத்துவ குழுவினா் கூலித் தொழிலாளியின் மனைவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.
