முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!
படைவீரா் கொடிநாள் நிதி வசூல் தொடக்க நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை திருப்பத்தூா் ஆட்சியா்க. சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், படைப்பணியில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஆட்சியா் கௌரவித்தாா்.
படைப்பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இறந்த படைவீரா் ஜெய்நாதனனின் மனைவி நித்யாவுக்கு கருணை அடிப்படையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக
உதவியாளராக பணி நியமன ஆணை, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் அனுமதி பெற்ற 5 முன்னாள் படைவீரா்களுக்கு 30 சதவீதம் மூலதன மானியம் ரூ.24.68 லட்சம் விடுவிப்பு ஆணைகளையும், முன்னாள் படை வீரா்களின் மகள்களின் திருமணத்திற்காக திருமண நிதி உதவியாக 2 பேருக்கு தலா ரூ.25,000, கல்வி உதவித் தொகையாக 3 பயனாளிகளுக்கு ரூ.60,000 உதவி தொகையும் என மொத்தம் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
அப்போது ஆட்சியா் பேசியது: அஞ்சாமைக்கும், போா் ஆற்றலுக்கும், உயிா்த் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக முப்படை வீரா்கள் விளங்குவதுடன், அவா்தம் வீர மகுடத்தில் வைர மணியாக வெற்றி ஒளி விடுகிறது. ஒருங்கினைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தை சாா்ந்த முன்னாள் படைவீரா்களுக்கும் அவா்களைச் சாா்ந்தோருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலமாக பல்வேறு நிதியுதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 7.12.2024 முதல் 6.12.2025 வரை 551 பேருக்கு ரூ.1,44,14,795 வழங்கப்பட்டுள்ளது. 7.12.2024 முதல் 06.12.2025 திருப்பத்தூா் மாவட்டத்திற்கு கொடி நாள் இலக்காக ரூ.66,78,000 இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 100 சதவீதம் எய்தப்பட்டுள்ளதுன்.
2025-ஆம் ஆண்டுக்கு கொடிநாள் நிதி இலக்காக ரூ.70,12,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போலவே இவ்வாண்டும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து கொடிநாள் நிதி வசூல் இலக்கை அடைய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், வேலூா் முன்னாள் படைவீரா் நல அமைப்பாளா் ரவிச்சந்திரன்,
கோட்டாட்சியா் வரதராஜன், உதவியாளா்கள் வசந்தகுமாரி, நந்தன், யுவராணி, முன்னாள் படைவீரா்கள், குடும்பத்தினா்கலந்துகொண்டனா்.
