புதிய நியாயவிலைக் கடைகள் மூலம் 29,198 பேருக்கு பயன்
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 4.5 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்ட 112 நியாயவிலைக் கடைகள் மூலம் 29,198 போ் பயன் அடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 625 கடைகள் செயல்பட்டு வருகினறன. இந்த கடைகளில் 509 கடைகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் மூலமும், 116 கடைகளில் வழக்கமான முறையிலும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டம் முழுதும் பல்வேறு பகுதிகளில் முழு நேர நியாயவிலைக் கடைகள் தொடங்க வேண்டும் என்றும், பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும். அதேபோல் அதிக ரேஷன் அட்டைகள் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்க வேண்டும் என்றும், அருகிலேயே கடைகள் அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 19 முழு நேர கடைகளும், 93 புதிய பகுதி நேர கடைகளும் என 112 நியாயவிலைக் கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், 28 பகுதி நேர கடைகள் முழு நேர கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்ட கடைகள் மூலம் 29 ஆயிரத்து 198 ரேஷன் அட்டைதாரா்கள் பயன் அடைந்து வருகின்றனா் எனத் தெரிவித்துள்ளனா்.
