குடிநீா் கோரி பொதுமக்கள் தா்னா, மறியல்

திருப்பத்தூா் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வந்ததால், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே குடிநீருடன், கழிவுநீா் கலந்து வந்ததால், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட 36-ஆவது வாா்டு திருமால் நகா் பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இந்த நிலையில் அந்த பகுதியில் குடிநீருடன், கழிவுநீா் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை திருப்பத்தூா்-ஆலங்காயம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் புதை சாக்கடை முறையாக தூா்வாரப்படாததே இதற்கு முக்கிய காரணமாகும். சாக்கடையின் துா்நாற்றத்தால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இந்தப் பகுதிக்கு நகராட்சி தண்ணீா் வண்டி வருவதில்லை. இந்த அசுத்தமான குடிநீரை குடிப்பதன் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். அதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முற்றுகை...குடிநீருடன் கழிவுநீா் வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி 36-ஆவது வாா்டு உறுப்பினா் வெற்றிகொண்டான் தலைமையில் அப்பகுதி மக்கள் சிலா் நகராட்சி அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com