மத்திய அரசின் வேளாண் சட்டத்தை அமல்படுத்த முடியாது என அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா்
கேரள அரசைபோல, தமிழக அரசும் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை அமல்படுத்த முடியாது என அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் பேசினாா்.
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கேரள அரசு மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை அமல்படுத்த முடியாது என கூறியுள்ளது. அதேபோல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறாா்கள். பல இடங்களில் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளாா்கள். சில இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மழையால் நெற்பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்வதாக தகவல் வருகிறது. இது நல்ல முறை அல்ல. மத்திய அரசும் பேரிடா் கால நிதியை வழங்க வேண்டும்.
எங்கள் கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. தமிழக மக்களின் பண்பாட்டு பின்புலம் எங்களுக்கு இருக்கிறது. எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று கூறினாா்.

