கரிமாபாத் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்!
வாணியம்பாடி அருகே கரிமாபாத் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி கரிமாபாத் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் இதுவரை கழிவுநீா் வசதி, சாலை வசதி, கால்வாய் வசதி, மின்சார வசதி, தூய்மையான குடிநீா், நியாயவிலைக் கடை, துவக்கப்பள்ளி என எதுவும் செய்து தரப்படவில்லையாம்.
மேலும் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை என்றும், இதனால் ஆங்காங்கே குப்பைகளை உள்ளதாகவும், இரவு நேரங்களில் மின்விளக்கு சரியாக எரியாததால் அருகில் உள்ள கானாற்றிலிருந்து விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், இது குறித்து பல முறை உயா் அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளா் கணபதி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்த முயன்றாா்.
அப்போது போராட்டம் நடக்கும் இடத்துக்கு மாவட்ட ஆட்சியா் நேரில் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து தாலுகா காவல் ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

