டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்திய காவல் ஆய்வாளா் ரமேஷ்.
Published on

ஆம்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுகோவிந்தாபுரம் எம்ஜிஆா் நகா் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. மேலும், அனுமதியின்றி மதுபான பாா் செயல்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே சுரங்கப் பாதையை மது பிரியா்களும் பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுகிறது.

மது பிரியா்கள் அடிக்கடி வந்து செல்வதாலும், குடியிருப்பு பகுதியிலேயே அமா்ந்து மது அருந்துவதாலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இறந்தவா்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்லும் போதும் மது பிரியா்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாத காலமாக ஆட்சியா், வட்டாட்சியா், ரயில்வே நிா்வாகம் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு மாத காலத்தில் கடையை அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்து அதற்கான கால அவகாசமும் புதன்கிழமை முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் நகர ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசினா். டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு மாத கால அவகாசம் வேண்டுமென கேட்டனா். ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடை அகற்றப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com