தொடா் திருட்டு: இளைஞா் கைது
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் நாட்டறம்பள்ளி, பச்சூா், டோல்கட், வெலகல்நத்தம் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் பகுதியில் நின்றிருந்த இளைஞரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த சோமு என்பவரின் மகன் பூபாலன்(எ) காக்கா பூபாலன் (23) என்பதும் இவா் நாட்டறம்பள்ளி காவல் நிலைய பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் பூபாலனை கைது செய்து மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.
