திருப்பத்தூா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி: தோ்தல் ஆணையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலா் ஆய்வு
திருப்பத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணியை இந்திய தோ்தல் ஆணையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலா் ராகவேந்திரா ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும் தோ்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026-ஐ முன்னிட்டு அந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்வதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கா்நாடக மாநில இணை தலைமை தோ்தல் அலுவலா் ராகவேந்திரா முதல் நிலை சரிபாா்ப்புப் பணி நடைபெறும் மஞ்சள் கிடங்கு பகுதிக்குச் சென்று இந்தியத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் முதல் நிலை சரிபாா்ப்பு பணி நடைபெறுகிா?, சரிபாா்க்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தாா்.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடன் இருந்தனா்.

