இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆதி மருத்துவா் சமூகத்தினா் தா்னா!
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கோரி, ஆதி மருத்துவா் சமூகத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதில் வாணியம்பாடி வட்டம், சொரக்காயல்நாத்தம் பகுதியை சோ்ந்த ஸ்ரீகாந்த் தலைமையில் ஆதிமருத்துவா் சமூக மக்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களிடம் கேட்டபோது, தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மனுக்கள் அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு மனைப் பட்டா வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். அதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனா்.
கந்திலி அருகே நத்தம் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 30,000 லிட்டா் குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீா் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக குடிநீா் தொட்டி கட்டித்தர வேண்டும் என கூறியிருந்தனா்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் பொதுநலச்சங்கத்தினா் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள தருமபுரி செல்லும் சாலை மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் உழவா் சந்தை அமைத்து தர வேண்டும். இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறுவாா்கள்.
விவசாயிகள் சங்கத்தினா் ராஜா பெருமாள், ராதாகிருஷ்ணன் தலைமையில் அளித்த மனு: ஆலங்காயம் அருகே மிட்டூரில் பொதுமக்கள்,பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அதனை வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும்.

