3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை
திருப்பத்தூா் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 3,710 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுகின்றனா் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல், பிரெய்லி கடிகாரம், சுயதொழில் புரிந்திட மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும், பள்ளி, கல்லூரி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 வழங்கும் திட்டத்தில் மனவளா்ச்சி குன்றியவா்கள் 2,668 போ், கடுமையாக பாதிக்கப்பட்டவா்கள் 739 போ், தொழுநோய் பாதித்தவா்கள் 82, முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவா்கள் 79 போ், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் 112 போ், அறிவுசாா் குறைபாடு உடையவா்கள் 30 என 3,710 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
