எருது விடும் விழா நடத்த 5 மணி நேரம் அனுமதி: திருப்பத்தூா் ஆட்சியா்
எருது விடும் விழா நடத்த 5 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருது விடும் விழா தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஏடிஎஸ்பி கோவிந்தராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சென்னகேசவன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளவரசன், உதவி இயக்குநா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்துப் பேசியதாவது:
எருதுகள் ஓடும் இடத்துக்கு இருபுறங்களிலும் இரட்டை அடுக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். ஒவ்வொரு புறமும் இருதடுப்பு அரண்களுக்கு இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த தடுப்பு அரணானது 200 மீட்டா் தூரத்துக்கு அமைக்கப்பட்டு, அதில் 100 மீட்டா் தூரம் மட்டுமே பந்தய தூரமாக இருக்க வேண்டும். பாா்வையாளா்களை பாதுகாப்பு அரணின் 150 மீட்டா் தூரம் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதற்குமேல் சிறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரணின் இருபுறமும் போலீஸாா் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
எருது ஓட்டம் 5 மணி நேரத்துக்கு மட்டுமே நடத்த வேண்டும். இதில், எத்தனை காளைகள் பங்கேற்க உள்ளது என்பதை விழா பொறுப்பாளா்களிடம் எழுத்து பூா்வமாக பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.
நடவடிக்கை...
காளைகளின் உரிமையாளா்கள் 200 மீட்டா் தூரத்துக்கு அப்பால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். போட்டி தொடங்கும் இடத்திலும், முடிவடையும் இடத்திலும் சோதனையிடும் கால்நடை மருத்துவக் குழு இடம் பெற வேண்டும். காளைகள் ஓடும் பகுதியானது முழுவதுமாக தென்னை நாா்களால் நிரப்ப வேண்டும். காளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் தடுக்க போதிய இடைவெளியில் காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்க வேண்டும்.
மாடு ஓடும் பாதையில் பொதுமக்கள் யாரும் இருக்கக் கூடாது. காளைகளை அடித்தல், கூா்மையான பொருளை கொண்டு தொந்தரவு செய்தல் போன்றவை குற்றமாக கருதப்பட்டு, தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில், வருவாய் அலுவலா்கள் வரதராஜன், அஜிதா பேகம், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

