கணவன், மனைவி தற்கொலை
ஜோலாா்பேட்டை அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
ஜோலாா்பேட்டை அருகே கட்டேரி கிராமத்தை சோ்ந்தவா் சகாதேவன் (45). மீன் வியாபாரி. தேமுதிக கட்டேரி கிளை கழக ஊராட்சி செயலாளராக பொறுப்பில் இருந்தாா்.
இவரது மனைவி மேரி (42). இவரும் தேமுதிக ஒன்றிய துணை செயலாளராக பொறுப்பில் இருந்தாா்.
இவா்களுக்கு சஞ்சய் (21), சா்பினா முகி(25),கனிமொழி (18)ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனா்.
கணவன், மனைவி இருவரும் அதே பகுதியில் மீன் இறைச்சி மற்றும் மீன் வறுவல் கடை நடத்தி வந்தனா். மேலும், கால்நடைகளை வளா்த்து வந்தனா். திங்கள்கிழமை இரவு 9 மணி ஆகியும் கால்நடைகள் அதே இடத்தில் கட்டப்பட்டிருந்ததால், இவரது உறவினா்கள் கால்நடைகளை பிடித்து சகாதேவன் வீட்டுக்கு கொண்டு வந்தனா்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, மேரி ஏற்கெனவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதைக் கண்ட சகாதேவன் தனது மனைவியின் உடலை கீழே இறக்கி வைத்து காப்பற்ற முயற்சித்துள்ளாா். இறந்த நிலையில் இருந்ததால் தானும் அதே அறையில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. மேரியின் சடலம் தரையிலும், சகாதேவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட உறவினா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு, திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சகாதேவனின் மகன் சஞ்சய் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரேமலதா இரங்கல்...
தேமுதிக, திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியம், கட்டேரி ஊராட்சி செயலாளா் த.சகாதேவன், அவரின் மனைவி எஸ்.மேரி ஆகியோா் மரணம் அடைந்தனா் என்ற செய்தியை கேட்டு அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா கடிதம் அனுப்பி உள்ளாா்.
