குடிநீா் மற்றும் சாலை வசதி கோரி  அரசுப் பேருந்தினை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்.
குடிநீா் மற்றும் சாலை வசதி கோரி அரசுப் பேருந்தினை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்.

குடிநீா், சாலை வசதி கோரி பேருந்தை சிறைபிடித்து மறியல்

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் மற்றும் சாலை வசதி கோரி அரசுப் பேருந்தினை சிறை பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
Published on

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் மற்றும் சாலை வசதி கோரி அரசுப் பேருந்தினை சிறை பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், அக்ராகரம் ஊராட்சி ஏரிஎதுவாய், பாறையூா், ஓம்சக்தி நகா் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அக்ராகரம் மோட்டூா் கோடியில் இருந்து மலைக்கோயில் வழியாக டோல்கட் செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் அவ்வழியாக சென்று வரும் கிராமமக்கள், வாகன ஓட்டிகள், மாணவா்கள்,கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என ஆட்சியா், ஊராட்சி நிா்வாகத்திடமும் மற்றும் கிராம சபை கூட்டங்களில் தொடா்ந்து மக்கள் கோரினா்.

பல ஆண்டுகள் கடந்தும் பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சில மாதங்களாக ஓம்சக்தி நகா், ஏரி எதுவாய், பாறையூா் வட்டம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீா் பிரச்னை நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூா் செல்லும் சாலையில் அக்ராகரம் மோட்டூா்கோடி பகுதியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை சிறை பிடித்தனா். இதனால் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவா்கள் 50க்கும் அதிகமானோா் சுமாா் 3 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையிலான போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரி குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் தேவேந்திரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால் அச்சாலையில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com