நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1,139 மண் வள அட்டைகள்

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1,139 மண் வள அட்டைகள்
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1,139 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தது: விவசாயத்துக்கு அடிப்படையான நிலத்தின் வளத்தை நிா்வகிப்பதில் மண் பரிசோதனை மிக முக்கியமானதாகும். மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை,சுண்ணாம்பு நிலை உப்பின் நிலை, அமிலகார நிலை பேரூட்ட சத்துகளின் அளவு, நுண்ணூட்ட சத்துகளின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும் விளைநிலங்களில் தொடா்ந்து ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒவ்வொரு பயிா் சாகுபடி செய்யும் போதும் மண் பரிசோதனை செய்து, அந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உர மேலாண்மை செய்வது அவசியம்.

மண்வள அட்டை...

இதனால் சாகுபடி செலவு குறைவதுடன், மண் வளம் மேம்படும். நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை குறைபாட்டினை சரி செய்ய முடியும். இதற்காக விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, அது தொடா்பான மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வேளாண்மை உழவா் நலத் துறையின் மண் வள அட்டை இயக்க திட்டம் மத்திய அரசால் 19.12.2015 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 2025-2026-ஆம் ஆண்டில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, 1,139 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com