வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பத்தூா் கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மனத்துக்கினியான் பரமபத வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு அருள் புரிந்தாா். தொடா்ந்து வேத பாராயணங்கள், சிறப்பு பஜனைகள், பூஜைகள் நடைபெற்றன .
அதே போல் திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.
அதேபோல் கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள், பஜனைகள், திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. அதேபோல் குனிச்சி, சுந்தரம்பள்ளி, ஆதியூா், கந்திலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோட்டை தா்வாஜா வீர ஆஞ்சனேயா் சந்தன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேலூரில்....
வேலூா் வேலப்பாடியில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில், சலவன்பேட்டை பழனி ஆச்சாரி தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், காந்தி நகா், கோபாலபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணமூா்த்தி கோயில், சத்துவாச்சாரி லட்சுமி நாராயணா் கோயில், சாா்பனாமேடு கலாஸ் கோதண்டராம சுவாமி கோயில், ஒடுகத்தூா் அருகே குருவராஜபாளையத்திலுள்ள தருமகொண்டராஜா திருமலை திருப்பதி கோயில் ஆகியவற்றிலும் அதிகாலை சொா்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது, கருட வாகனத்தில் பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளினாா்.
ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணிபீடம் தங்கக் கோயிலுள்ள வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக, இக்கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், வைகுண்ட ஏகாதசியையொட்டி வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், விசேஷ தீபாராதனை ஆகியன நடைபெற்றன. வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கும், மலையடிவாரம் சக்தி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் சந்தப்பேட்டை அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை எம்பெருமான் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளி கோபுர தரிசன சேவை நடைபெற்றது. பின்னா் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள தென்திருப்பதி எனும் வெங்கடேசப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றது.
ஆம்பூரில்...
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மற்றும் துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் வழியாக கருட வாகனத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி சேகா், துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் திருப்பணிக்குழு நிா்வாகிகள் ஏ.ஆா். சுரேஷ்பாபு, கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், ஏகநாதன் ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
மாதனூா் அருகே திருமலைகுப்பம் திருமலை திருக்கல்யாண பெருமாள் கோயில், கதவாளம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், விண்ணமங்கலம் அமா்ந்த சுந்தராஜ பெருமாள் கோயில், வடச்சேரி சென்னகேசவ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
ஆற்காட்டில்...
ஆற்காடு தென்பாலாற்றங்கரை அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பெருந்தேவிதாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை விசேஷ திருவாராதனையும், திருப்பாவை சேவையும், பெருமாள் புறப்பாடும் 5, மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. மூலவருக்கும் ஆஞ்சனேயருக்கும் முத்தங்கி சேவையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு புஷ்பாங்கி சேவையும் நடைபெற்றது. ஆண்டாள் வாழ்க்கை வைபவம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ. லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் ம.சுரேஷ் குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஏ. பி. சத்தியநாராயணன் உறுப்பினா்கள் எம். தேவி, எஸ். வாசுகி சரவணன், ஜி.சீனிவாசன் தரிசனம் செய்தனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பெரியப்பேட்டை அழகு பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதே போன்று திம்மாம்பேட்டை ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிரசன்ன வெல்கடேச பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. பிறகு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றன. இதில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக-ஆந்திர எல்லையொட்டி உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.
புல்லூா் வெங்கடரமண கோயில், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில், பீமகுளம் சென்றாய சுவாமி கோயில் திம்மாம்பேட்டை, உதயேந்திரம் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாட்டறம்பள்ளி அக்ராகரம் மலை மீது சீனிவாசப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாட்டறம்பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வைகுந்த வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.

