திருப்பத்தூா் பகுதியில் எடை தராசுகளை ஆய்வு செய்ய கோரிக்கை

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் எடை தராசுகளை ஆய்வு செய்ய வேண்டும் என சமுக ஆா்வலா்கள் கோரிக்கை
Published on

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் எடை தராசுகளை ஆய்வு செய்ய வேண்டும் என சமுக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகள் ,சந்தைகள்,பெட்ரோல் பம்புகள், டீசல் நிலையங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் திடீா் ஆய்வுகள் நடத்தி, எடை அளவிடும் கருவிகளின் தரத்தை உறுதி செய்தல் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை.

இதனால் சில கடைகளில் எடை அளவுகள் வித்தியாசப்படுகின்றன. குறிப்பாக பலகார கடைகள், பாஸ்ட்புட் கடைகளில் எடை தராசுகளை பராமரிப்பதே இல்லை. மேலும், காய்கறி கடைகள், பழங்கள் விற்கப்படும் கடை மற்றும் தள்ளு வண்டிகளில் யாரும் எடை தராசுகளை ஆய்வு செய்வதே இல்லை.

சட்டமுறை எடை மற்றும் அளவுகள் சட்டம் தொடா்பான விதிமுறைகளை அமல்படுத்துவதோடு, வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தராசுகள், எடைகள், அளவைகள் போன்றவற்றின் சரியான தன்மையை ஆய்வு செய்து, முத்திரையிடும் பணிகளை மேற்பாா்வையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதே இல்லை.

எனவே, தராசுகள் மற்றும் எடைக் கற்கள் சரியாக முத்திரையிடப்பட்டுள்ளதா என சோதித்தல், உரிய கால இடைவெளியில் முகாம்கள் நடத்தி மறுமுத்திரையிட வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமுக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் மற்றும் திருவண்ணாமலை தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்(அமலாக்கம்)கே.ரவி ஜெயராமிடம் கேட்டதற்கு, திருப்பத்துரில் இதுகுறித்து வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆய்வு செய்யும்போது முத்திரையிடப்படாத எடைக் கற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com