ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டு: இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூா் வரை செல்லும் விரைவு ரயில் கடந்த வாரம் ஆம்பூா் ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பெங்களூரை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் ஜன்னல் ஓரத்தில் அமா்ந்திருந்தாா்.
அப்போது இளைஞா் ஒருவா் அவா் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயினை ஜன்னல் வழியாக பறித்து சென்றாா். இதே போல் சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு வந்த மற்றொரு விரைவு ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த சேலத்தை சோ்ந்த பயணி ஒருவரிடம் கைப்பேசி பறிக்கப்பட்டது.
இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் காவல் ஆய்வாளா் கோமதி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் ஆம்பூா் ரயில்நிலையம் 2-ஆவது நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில், ஆம்பூா் கம்பிகொள்ளை பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் பரமேஷ்(20) என்பதும், இவா் ரயில் பயணிகளிடம் வெள்ளி செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸாா், பரமேஷை கைது செய்து திருப்பத்துாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த வெள்ளி செயின் மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

