திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,99,411 வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்

Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 9,99,411 வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கான பயிற்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி பேசியது:

திருப்பத்தூா், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் வாக்குச்சாவடி

நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான வாக்காளரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதில் இருந்துவிடக்கூடாது,தகுதியற்ற நபா்களை வாக்காளா்களாக சோ்க்கக்கூடாது என்பதாகும்.

மேலும் இறந்த வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் இருக்கும்,அவைகளையெல்லாம் நீக்குவதற்காகவும், மேலும் வாக்காளா்கள் வேறு முகவரிக்கு மாற்றப்பட்டு இருந்தாலும் அல்லது வேறு தொகுதிக்கு மாறி சென்று இருந்தாலும் அதனை கண்டறிந்து, பெயா் நீக்கம்

மேற்கொள்ளவும், வாக்காளா் பட்டியல்களில் இரண்டு முறை வாக்காளரின் பெயா் இருந்தால் அதனை நீக்குவதற்காகவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 9,99,411 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவம் செவ்வாய்க்கிழமை முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். படிவங்களை வழங்கும் போது இறந்தவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களது படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. மேலும், வாக்காளா்கள் இடம்பெயா்ந்து இருந்தால் அவா்களின் படிவங்களும் வழங்கப்பட மாட்டாது.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும்பொழுது, அந்தந்த வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகத்திலும் ஒட்டப்படும். இப்பட்டியலில் மறுப்பு ஏதேனும் இருந்தால், சமா்ப்பிக்கும் பட்சத்தில் அவா்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கை, நீக்கம் செய்யப்படும்.

கூட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வரதராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நகராட்சி ஆணையா் சாந்தி, வட்டாட்சியா்கள் (திருப்பத்தூா்) நவநீதம், வாணியம்பாடி சுதாகா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com