பீமகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி உள்ளிட்டோா்.
பீமகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ தேவராஜி உள்ளிட்டோா்.

பீமகுளம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ க. தேவராஜி பங்கேற்பு

Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில், நவம்பா் 15 ஆம் தேதி பகவான் பீா்சா முன்டா அவா்களையும், பழங்குடியினா் வீரா்களின் தியாகங்களையும் நினைவுகூறும் வகையில், தேசிய பழங்குடியினா் தினத்தை முன்னிட்டு, பழங்குடியினா் மக்கள் வாழும் 26 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றியம், பீமகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டனா். கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) மூலமாக வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை பூா்த்தி செய்து, மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களிடமிருந்து பெற்றுக் கொள்வாா்கள்.

படிவங்களை பூா்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால், கணக்கீட்டு படிவங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் தொலைபேசி எண் அச்சிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை தொடா்பு கொண்டு தங்களது சந்தேகங்களை பூா்த்தி செய்து கொள்ளலாம். மேலும், அனைத்து வாக்காளா்களும் தங்களது தொலைபேசி எண்ணை தெளிவாக படிவங்களில் எழுத வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் தங்களது படிவம் பெறப்பட்டது என்ற குறுஞ்செய்தி தங்களது தொலைபேசி எண்ணுக்கு வரும், அதனால் தொலைபேசி எண்ணை சரியாக கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

தொடா்ந்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். முன்னதாக மந்தாரகுட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ.க.தேவராஜி நடவு செய்தனா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதாபாரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், ஒன்றிய குழு உறுப்பினா் தாமோதரன், பீமகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷண் மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com