கந்திலி அருகே 450 கிலோ செம்மரக் கட்டைகள் காருடன் பறிமுதல்

செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை விரட்டி வந்த கா்நாடக மாநில போலீஸாா் கந்திலி அருகே 450 கிலோ செம்மரக்கட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனா்.
Published on

செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை விரட்டி வந்த கா்நாடக மாநில போலீஸாா் கந்திலி அருகே 450 கிலோ செம்மரக்கட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் கூறியதாவது: கா்நாடக மாநிலம், பெங்களூா் நகர போலீஸாா் ஒரு வாரத்துக்கு முன்பாக செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், மற்றொரு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை பிடிக்க பெங்களூரு நகர போலீஸாா் தனிப்படை அமைத்தனா்.

மேலும், தமிழகம்-கா்நாடக எல்லையில் செம்மரக் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில், பெங்களூா் நகர போலீஸாா் அவா்களை பிடிக்க முயன்றனா். செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் போலீஸ் வாகனத்தை பாா்த்ததும், தப்பி தமிழகத்தில் நுழைந்தது.

அதன் பின்னா் ஒசூா், கிருஷ்ணகிரி, தருமபுரி என பல்வேறு வழியாக கிட்டத்தட்ட சுமாா் 250 கி.மீ. வரை போலீஸாா் அவா்களை பின் தொடா்ந்து விரட்டி வந்தனா். இதனால் அச்சமடைந்த செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் திருப்பத்தூா் மாவட்டம்,சின்ன கந்திலி பகுதியில் தாங்கள் வந்த காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினா்.

அதைத் தொடா்ந்து கா்நாடக மாநில போலீஸாா் காரை சோதனை செய்தபோது, அதில் சுமாா் 450 கிலோ மதிப்பிலான 11 செம்மரக் கட்டைகள் கடத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து, கா்நாடக போலீஸாா் காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா். மேலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் தலைமறைவான செம்மரக் கடத்தல் கும்பலை கா்நாடக போலீஸாா் தேடி வருவதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com