பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூா் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலு. இவரது மனைவி திலகவதி. இவா்களுக்கு 2 மகள்கள், மகன் ஒன்றரை வயது துருசாந்து. பெண் குழந்தைகள் இருவரும் சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா். அவா்களை வழக்கம்போல் பள்ளி வேனில் ஏற்றுவதற்காக திலகவதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே வந்துள்ளாா். வீட்டையொட்டி வந்து நின்ற பள்ளி வேனில் இடது பக்கமாக அழைத்து வந்து 2 பெண் குழந்தைகளையும் ஏற்றியுள்ளாா். அப்போது குழந்தை துருசாந்து வீட்டிலிருந்து தவழ்ந்து வெளியே வந்துள்ளது. வலது பக்கத்தில் குழந்தை இருப்பதை வேன் ஓட்டுநா் கவனிக்காமல் இயக்கியபோது, பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துருசாந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த காவலூா் போலீஸாா் விசாரித்தனா். பின்னா் குழந்தையின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து அலட்சியமாக வேகமாக வேனை இயக்கி குழந்தை இறப்புக்கு காரணமான ஓட்டுநா் விஜயகுமாா் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

