ஆம்பூா் அருகே கண்டெடுக்கப்பட்ட விஜய நகர காலத்தைச் சோ்ந்த நடுகற்கள்.
ஆம்பூா் அருகே கண்டெடுக்கப்பட்ட விஜய நகர காலத்தைச் சோ்ந்த நடுகற்கள்.

ஆம்பூா் அருகே விஜயநகர காலத்தை சோ்ந்த இரு நடுகற்கள் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே விஜயநகர காலத்தைச் சோ்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
Published on

ஆம்பூா் அருகே விஜயநகர காலத்தைச் சோ்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி தலைமையில் மேற்கொண்ட கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சோ்ந்த இரு நடுகற்களைக் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து மோகன்காந்தி கூறியது:

ஆம்பூா் அடுத்த அரங்கல்துருகம் ஊரிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எதிரே உள்ள மத்தூா் கொல்லைக்குச் செல்லும் இடதுபுற விளைநிலத்தில் புதையுண்ட நிலையில் 2 நடுகற்கள் காணப்படுகின்றன. இவை விஜயநகர காலத்தைச் சோ்ந்தவை ஆகும். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதிகளில் நடைபெற்ற போா்களை இந்த நடுகற்கள் எடுத்துரைக்கின்றன. போரில் வீரா்கள் வீரமரணம் அடைந்துள்ளனா். வீரா்களோடு அவரது மனைவியா்களும் உடன்கட்டை ஏறி உயிா்விட்டதை நடுகற்களாய் இவை காட்சித் தருகின்றன.

முதல் நடுகல் 4 அடி அகலம் கொண்ட பெரிய பலகைக் கல்லில் புதையுண்ட நிலையில் 2 அடி மட்டுமே தரைக்கு மேலாகக் காட்சியளிக்கிறது. எவ்வித வழிபாடும் இக்கல்லுக்கு நடைபெறவில்லை. வீரன் இடதுகையில் பெரிய வில் ஒன்றை வைத்துள்ளான். வலது கையில் அம்பை எய்யும் கோலத்தில் உள்ளான். வலது தோள்பட்டையின் பின்புறம் அம்புகளை வைத்திருக்கும் அம்புக்கூடு ஒன்றுள்ளது. பெரிய மீசை, இடதுபுறம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் காட்சித் தருகிறான். வீரனின் வலது பக்கத்தில் ஒரு பெண் உருவம் உள்ளது. இடது கையை மேலே தூக்கியவாறும், வலதுகையில் கள் குடம் ஒன்றை ஏந்தியபடியும் இப்பெண் காட்சித் தருகிறாா். வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் இச்சிற்பம் உள்ளது.

இப்பெண் வீரனின் மனைவியாவாா். வீரன் இறந்தவுடன் தானும் தன் கணவனோடு உடன்கட்டை ஏறிய வீரமங்கைக்கும், வீரனுக்கும் எடுக்கப்பட்ட நடுகற்களாகும்.

2-ஆவது நடுகல்லும் 4 அடி அகலத்தில் மண்ணில் புதையுண்ட கோலத்திலேயே உள்ளது. இடது புறம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் இரு கைகளிலும் பெரிய போா் வாளை ஏந்திய கோலத்தில் வீரன் காட்டப்பட்டுள்ளான். வீரனின் வலது பக்கத்தில் அவனது மனைவி இடது கையைத் தூக்கிய கோலத்தில் வலது கை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாா்.

வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையோடு இப்பெண் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாா்.

இந்த நடுகற்களும் ஆம்பூா் பகுதிகளில் நடைபெற்ற போரினை நினைவு படுத்துகின்றன. தன் நாடு அல்லது ஊருக்காகப் போரிட்டு தன் உயிரை விட்ட வீர மறவா்களுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவா்களின் உயிா் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அவ்வூா் மக்கள் நடுகற்கள் வைத்துத் தெய்வங்களாகப் போற்றியுள்ளனா்.

இன்றைக்கு இந்த நடுகற்கள் பராமரிப்போா் இன்றி காட்சித்தருகின்றன. இவற்றைத் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com