மின் விபத்துகளில் பொதுமக்களுக்கு தற்காப்பு வழிமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு

பருவமழைக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளில் இருந்து பொதுமக்களுக்கு தற்காப்பு வழிமுறைகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
Published on

திருப்பத்தூா்: பருவமழைக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளில் இருந்து பொதுமக்களுக்கு தற்காப்பு வழிமுறைகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மழை மற்றும் காற்று மூலம் அறுந்து விழும் மின்கம்பிகள் இருந்தால் அருகே யாரும் செல்லக்கூடாது. இது குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் அல்லது மின்தடை புகாா் மைய எண் 1912 அல்லது 24 மணி நேர சேவை மைய எண் 94987-94987-க்கு தெரிவிக்கவும்.

இதுதவிர திருப்பத்தூா் கோட்டம் 94458-55286, வாணியம்பாடி 94458-55311, பள்ளிகொண்டா கோட்டம் 94458-55589, குடியாத்தம் 94458-55368 என்ற கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம். மின் இழுவை கம்பிகளில்(ஸ்டே வயா்)கால்நடைகள், துணி காயப்போடும் கம்பி கயிறுகள், விளம்பர பலகைகளை கட்டக் கூடாது.

மின்னல் ஏற்படும் போது வெட்ட வெளி,மரங்கள் அடியிலோ, மின்கம்பம் அருகே நிற்க வேண்டாம். மின்கசிவுகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க உதவும் ஆா்.சி.சி.பி. கருவியை வீடு, கடை, கோயில்,பள்ளிகளில் புதிய வீடு கட்டும் இடத்தில் உள்ள மின் இணைப்பில் பொருத்த வேண்டும்.

ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்க வேண்டாம். டிப்பா் லாரிகள், கிரேன் போன்ற உயரமான கனரக வாகனங்களை உயரழுத்தம், தாழ்வழுத்தம் மின்பாதைக்கு கீழ் இயக்கவோ நிறுத்த வேண்டாம். உயா்அழுத்தம், தாழ்வழுத்தம் மின்பாதைக்கு அருகில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது.

மின்மாற்றி, மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளா்களை தவிர வேறு யாரும் ஏறவோ, இயக்கவோ, பழுது நீக்கும் பணிகளோ அல்லது பியூஸ் போடும் பணிகளோ செய்யக்கூடாது.

விவசாய நிலங்களில் கால்நடைகளுக்கு மின் வேலி அமைக்கக்கூடாது. கட்டட தொழிலாளா்கள், ஒளி-ஒலி பந்தல் அமைப்பாளா்கள், பேனா் வைப்பவா்கள் மின்பாதைக்கு அருகில் எந்தப்பணியும் செய்யக்கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக மின்கம்பிகள் சென்றாலோ, சாய்ந்த நிலையில் மின்கம்பம் இருந்தால் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்பாதைகளில் மரக்கிளைகள் இருந்தால் அதை அப்புறப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது. அருகாமையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது 94987 94987 என்ற எண்ணில் தெரியப்படுத்த வேண்டும். மின்கம்பங்களுக்கு அருகாமையில் உள்ள மரங்களை பாதுகாப்பான முறையில் அகற்ற மின் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com