அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்: 75 போ் கைது

அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்: 75 போ் கைது

Published on

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டையில் அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திம்மாம்பேட்டையில் மயானத்துக்கு போதிய இடவசதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு இடம் தேவைப்படும் நிலையில், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யும் வருவாய்த் துறையை கண்டித்தும் திம்மாம் பேட்டை பொதுமக்கள் பேருந்துநிறுத்தம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு தலைமையில் திம்மம்பேட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் விசாரித்தனா். வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் தலைமையில் வருவாய்த் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூா் நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கூடாது என்றும், இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, சிறு விளையாட்டு பூங்கா, சுடுகாடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னா் மற்றவா்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனா்.

தொடா்ந்து கிராம மக்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனா்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com