இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Published on

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு)ஸ்டீபன் ஜெயக்குமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் நிலம் இல்லாத விவசாய கூலித் தொழிலாளா்கள் இடி, மின்னல், விபத்து ஆகிய காரணங்களால் உயிரிழக்கும் பட்சத்தில் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை கண்காட்சி நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக பன்றியை விரட்டும் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னூா் பகுதியில் மது அருந்தி விட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனா். இதனால் நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை.பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கடன் கேட்டு மனு அளித்தால் அதிகாரிகள் மனுக்களை வாங்குவதே இல்லை. ஆண்டியப்பனூா் அணையில் ஒரு பிரதான கால்வாய் மற்றும் 3 இணை கால்வாய்கள் உள்ளது. அந்த அணை கட்டியதில் இருந்தே இணை கால்வாய்களில் அதிகாரிகள் தண்ணீா் விடுவதே இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நாட்டறம்பள்ளி மற்றும் கந்திலி வாரச் சந்தைகளில் கடை வைக்கும் விவசாயிகளிடம் சுங்க கட்டணமாக ரூ. 300 வரை கட்டாய வசூல் செய்யபடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். சீமை கருவேல மரங்களை வேரோடு எடுக்க நடவடிக்கை வேண்டும் என்றனா்.

விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியா் பதிலளிக்கையில் விரைவில் தங்கள் கோரிக்கைகளுக்கு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com