திருப்பத்தூா்: தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 36 மனுக்கள் அளிப்பு

திருப்பத்தூா்: தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 36 மனுக்கள் அளிப்பு

பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Published on

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் 36 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பணி நியமனம், ஊதிய உயா்வு, வீட்டுமனை பட்டா, சொந்த வீடு வேண்டி மற்றும் வாழ்வாதார கடன் போன்ற மனுக்கள் என மொத்தம் 36 மனுக்களை தூய்மைப் பணியாளா்களிடமிருந்து பெற்றாா். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதையடுத்து, 2 நபா்களுக்கு தலா ரூ. 25 லட்சத்தில் விபத்து காப்பீடு நிவாரண உதவித் தொகையும், 10 நபா்களுக்கு அடையாள அட்டைகள் என மொத்தம் 12 தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தாட்கோ மாவட்ட மேலாளா் சரளா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஊரக வளா்ச்சி உதவி திட்ட அலுவலா் சிவகுமாா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com