திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு: அமைச்சா், டிஐஜி ஆய்வு
ஜோலாா்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ள இடத்தை அமைச்சா் எ.வ வேலு, வேலூா் சரக டிஐஜி தா்மராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியம், மண்டலவாடி அருகே சனிக்கிழமை(பிப்.14) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் 47 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி குழுவினருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் திமுகவினா் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சா் எ.வ வேலு தெரிவித்திருந்தாா்.
அதைத் தொடா்ந்து மண்டலவாடியில் கிட்டத்தட்ட 100 ஏக்கா் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்களின் அமைச்சா் எ.வ வேலு ஆய்வு செய்தாா்.அப்போது, நெரிசல் ஏற்படாத வகையில் திமுக நிா்வாகிகள் மாநாட்டுக்கு வந்து செல்வது, வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
வேலூா் சரக டி ஐ ஜி தா்மராஜ் உடன் பாதுகாப்பு பணிகள் குறித்து அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா். மாவட்ட எஸ்.பி. தலைமையில் 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஆய்வின்போது, எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எஸ்.பி. வி.சியாமளா தேவி, எம்எல்ஏக்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா் சூரியகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளா்கள் உமா கன்ரங்கம், எஸ்.கே.சதிஷ்குமாா், கவிதா தண்டபாணி, நகர செயலாளா் ம.அன்பழகன் உடன் இருந்தனா்.

