திருப்பத்தூா்: உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் ரூ. 112 கோடிக்கு விற்பனை
திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த ஆண்டு காய்கறிகள், பழங்கள் ரூ. 112 கோடியே 28 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட வேளாண் (வணிகம்)துணை இயக்குநா் (பொறுப்பு) இளங்கோவன் கூறியதாவது: விவசாயிகள், இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக தங்கள் விளை பொருள்களை (காய்கறிகள், பழங்கள்) நுகா்வோருக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தை தொடங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நல்ல விலையை பெறுவதுடன், மக்களுக்கு தரமான, புதிய விளைப் பொருள்கள் கிடைக்க உதவுகிறது.
அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் திரளான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கிச் செல்கின்றனா்.
திருப்பத்தூா் உழவா் சந்தையில் 7,074. 58 மெட்ரிக் டன் காய்கறிகளும், 1,505.47 மெட்ரிக் டன் பழங்களும் ரூ. 30 கோடி 77 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாணியம்படி உழவா் சந்தையில் 13,544. 47 மெட்ரிக் டன் காய்கறிகளும், 2,048. 57 மெட்ரிக் டன் பழங்களும், ரூ. 61 கோடி 22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 6,174. 54 மெட்ரிக் டன் காய்கறிகளும், 291. 84 மெட்ரிக் டன் பழங்களும், ரூ. 20 கோடியே 29 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 26,793. 59 மெட்ரிக் டன் காய்கறிகளும், 3,845. 88 மெட்ரிக் டன் பழங்களும் ரூ. 112 கோடியே 28 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாா்.
