மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாா்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனா். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
அதனால் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரி வருகின்றனா். ஆனால் ஆம்பூா் நகரில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்ட போதிலும், சான்றோா்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க வழிமட்டும் ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
தொடா்ந்து தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முடியாதவாறு சாலையின் நடுவே அண்மையில் தடுப்பு அமைக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
அதனால் சான்றோா்குப்பம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கை மீண்டும் வலுபெற்றுள்ளது. மேம்பாலம் அமைக்க வேண்டுமெனக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் சாா்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து சான்றோா்குப்பம் மந்தகரை பகுதியில் பொதுமக்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் முக்கிய பிரமுகா்கள் அன்பு என்கிற அறிவழகன், கோபிநாத், குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

