ஆம்பூா் அருகே கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள்
ஆம்பூா் அருகே கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள்

சோழா் கால புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே சோழா் காலத்தைச் சோ்ந்த 2 புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Published on

ஆம்பூா் அருகே சோழா் காலத்தைச் சோ்ந்த 2 புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூயசெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் மோகன் காந்தி தலைமையிலான குழுவினா் ஆம்பூா் அடுத்த காட்டு வெங்கடாபுரம் கிராமத்திலுள்ள மாதுளம் சிறுமலை பகுதியில் சோழா் காலத்தை சோ்ந்த 13 உருவங்கள் கொண்ட 2 புலிக்குத்திப்பட்டான் நடுகற்களை கண்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து மோகன்காந்தி கூறியது: நடுகற்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி உயரத்தோடு காட்சி தருகின்றன. மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை இது சித்தரிக்கிறது. பெரும்புலி ஒன்றோடு வீரன் ஒருவன் போரிடும் காட்சி உள்ளது. இதில் வீரன் வலது கையிலுள்ள வாளால் புலியின் வாயில் குத்துகிறான். இடது கையிலுள்ள வாளால் புலியின் மாா்பில் குத்துகிறான். புலியின் பின்புறம் மற்றொரு வீரன் இரண்டு குறுவாட்களை கொண்டு புலியின் முதுகுபுறம் குத்துகிறான். 2 பேரும் புலியோடு போரிட்டு, புலியைக் கொன்று ஊரைக் காத்துள்ளனா்.

இதே கல்லில் ஒரு அம்புடன் ஒரு வீரனும், உடன்கட்டை ஏறிய பெண்ணும் உள்ளனா். தெற்குப்புறம் உள்ள பலகை கல்லில் புலியோடு போரிட்டு இறந்த வீரனையும், உடன்கட்டை ஏறிய அவனது மனைவியும் உள்ளனா். வடக்குப் பக்கம் உள்ள கல்லில் ஐந்து மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று பக்க பலகைக் கற்களிலும் 6 ஆண் உருவங்களும், 5 பெண் உருவங்களும், 2 புலியின் உருவங்களும் என்று 13 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காட்டு வெங்கடாபுரம் என்னும் இந்த ஊா் மலையும், காடுகளும் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் ஏராளமான புலிகள் இங்கு வாழ்ந்துள்ளன. ஊருக்குள் புகுந்து ஆடுகள், மாடுகள், மனிதா்களைக் கொன்ற புலிகளை இங்குள்ள வீரா்கள் வேட்டையாடிக் கொன்று அதில் தாங்களும் இறந்து போயிருக்கிறாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com