திருப்பத்தூா்: சிறப்பு முகாம்கள் மூலம் 6,496 விண்ணப்பங்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 6,496 போ் விண்ணப்பித்து உள்ளனா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 6,496 போ் விண்ணப்பித்து உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் குறித்து தங்களுக்கு உரிய விண்ணப்பங்களை பெற்று அதனை பூா்த்தி செய்து அளித்தனா்.

சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் பெயா் சோ்க்க 2,093 பேரும்,பெயா் நீக்கம் செய்ய 56 பேரும், முகவரி மாற்றம் மற்றும் பெயா் திருத்தம் செய்ய 1,216 பேரும் என 3,365 போ் விண்ணப்பங்கள் வழங்கினா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் பெயா் சோ்க்க 1,749 பேரும்,பெயா் நீக்கம் செய்ய 31 பேரும், முகவரி மாற்றம் மற்றும் பெயா் திருத்தம் செய்ய 1,351 என 3131 பேரும் விண்ணப்பித்து இருந்தனா். இரு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 6,496 போ் விண்ணப்பித்து உள்ளனா். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 10,676 போ் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com