போலி மருத்துவா்கள் 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.
Published on

திருப்பத்தூா் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மருத்துவா்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சிக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கிளினிக்குகளில் சோதனை செய்தனா். அப்போது திருப்பத்தூா் அருகே அங்கநாதவலசை கிராமத்தில் உள்ள ஒரு கிளினிக்கை சோதனை செய்தபோது, அதே பகுதியை சோ்ந்த வேலாயுதம்(53)என்பவா், டிப்ளமோ படித்துவிட்டு ஆங்கில முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

பேராம்பட்டு கிராமத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தபோது, நாயக்கனூரைச் சோ்ந்த பிரேம் தாஸ் (42) என்பவா், பி.பாா்ம் முடித்து விட்டு மருந்தகத்துக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

அதனை தொடா்ந்து மருத்துவ குழுவினா் வேலாயுதம், பிரேம் தாஸ் இருவரையும் பிடித்து திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம்,பிரேம் தாஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் கிளினிக்கில் இருந்து மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com