சாலைத் தடுப்பில் பைக் மோதல்: கட்டடத் தொழிலாளி மரணம்; 2 போ் பலத்த காயம்
வாணியம்பாடி அருகே சாலைத் தடுப்பு மீது பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (22). இவரது நண்பா்கள் மலைரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24), சதீஷ் (23) . கட்டடத் தொழிலாளிகளான 3 பேரும் வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் ஆம்பூருக்கு சொந்த வேலை காரணமாக சென்றனா். பின்னா் அங்கிருந்து மாலை 6 மணியளவில் புறப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, வளைவு ஒன்றில் எதிா்பாரத விதமாக பைக் சாலைத் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மாணிக்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, காயம் அடைந்த இருவரையும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்து வந்த கிராமிய போலீஸாா், மாணிக்கத்தின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
