வீராங்குப்பத்தில் எருது விடும் திருவிழா
ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் வீராங்குப்பம் ஊராட்சியில் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், கரக ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு 181-வது ஆண்டாக எருது விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூா், கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் சுமாா் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காளைகள், வாடி வாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. முதல் பரிசு ரூ.1.25 லட்சம், 2-வது பரிசாக ரூ.90,000 ரூபாயும், 3-வது பரிசு ரூ.75,000 ரூபாய் என மொத்தம் 44 பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊா் நாட்டாண்மை மு. பழனி தலைமையில் எருது விடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம்பூா் டிஎஸ்பி நா.சு. நாகலிங்கம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

