மின் கம்பங்களை அகற்றி விட்டு  சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி அருகே,  சாலையின் குறுக்கே இருக்கும் மின் கம்பங்களை அகற்றி, அவற்றை சாலையோரம் நட்ட பின்னர் சாலை  அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Updated on
1 min read

பொன்னேரி அருகே,  சாலையின் குறுக்கே இருக்கும் மின் கம்பங்களை அகற்றி, அவற்றை சாலையோரம் நட்ட பின்னர் சாலை  அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொன்னேரி-மீஞ்சூர் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது  நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரம் இருந்த 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும்,  பொன்னேரி, மேட்டுப்பாளையம், நாலூர், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், இலவம்பேடு, கொக்குமேடு, புலிக்குளம்  ஆகிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அண்மையில் அகற்றினர். தற்போது, சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. 
இந்நிலையில், பொன்னேரி  வேண்பாக்கம் பகுதியில் சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமலேயே, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியே வரும் வாகனங்கள் சாலையில் குறுக்கே உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. 
இச்சாலையில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு அங்கு இன்னமும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டிருப்பதால்  இவ்வழியே கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதிப் படலம் ஏற்படுகிறது. 
முக்கியத்துவம் வாய்ந்த சாலை: மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் இடையஞ்சவாடி, கொண்டக்கரை, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள தனியார் கண்டெய்னர் கிடங்குகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியேதான் சென்று வரவேண்டும். இதனால், இச்சாலையில் எப்போதும் கனரக  வாகனங்களின் போக்குவரத்து நிறைந்திருக்கும். எனவே, இச்சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களை அகற்றி அவற்றை சாலையோரம் நட்ட பின்னர் சாலை அமைக்கும் பணிகளைத் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com